மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கும் : கல்வி அதிகாரிகள் தகவல்
அடுத்த கட்ட படிப்பைத்தொடர மதிப்பெண் பட்டியல் அவசியம் என்பதால், 10 மற்றும் 12ம் வகுப்புக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், கடந்த இரு கல்வியாண்டிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.அரசின் 'ஆல்பாஸ்' அறிவிப்பால், மாணவர்கள் அனைவரும் அடுத்த கட்ட படிப்பை தொடர்ந்தும் வருகின்றனர்.
அதன்படி, 2019-20ம் கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் வழங்கப்பட்டது.அதேபோல், 2020-21ம் கல்வியாண்டு, மதிப்பெண் பட்டியல் அளிக்கப்படாமல், 'தேர்ச்சி' என்ற சான்று மட்டும் அளிக்கப்பட்டது. அவ்வகையில், இரு ஆண்டுகளாக, எந்தவொரு தேர்வையும் முறையாக எழுதாத மாணவர்களே, தற்போது, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் உள்ளனர்.அவர்கள், அடுத்த கட்ட படிப்பைத் தொடர மதிப்பெண் பட்டியல் அவசியம் என்பதால், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 10 மற்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாநில அளவில், ஒரே நேரத்தில், திருப்புதல் தேர்வு நடத்த இருந்தது. அதற்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இம்மாணவர்கள், உயர்கல்வி பயில மதிப்பெண் பட்டியல் அவசியம். இதற்காகவே, பொதுத்தேர்வு நடத்தப்படும்.இல்லையெனில், திருப்புதல் தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் அளிக்க திட்டமிடப்படும். தற்போதைய சூழலில், பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பின்தங்கியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment