தமிழகத்தில் மீண்டும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 9 வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் நேரடி வகுப்புகளை துவங்க வேண்டும் என்று அரசுக்கு பெற்றோர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பேரலை தொற்றுக்கு மத்தியில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலங்களில் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
தவிர பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் ஏற்கனவே ஜனவரி 10ம் தேதி வரை 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ள அரசாங்கம், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களுக்குமான பள்ளிகளை மூடும்படிக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஜன.6) முதல் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி இருக்கிறது.
இப்போது கொரோனா பேரலை தொற்றின் தாக்கத்தினால் பள்ளி மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டுமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது பல பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கல்வி என்பது முழுமையாக கிடைக்காத பட்சத்தில் இந்த ஆன்லைன் கல்வி முறை பலனளிக்காது என்று கருதப்படுகிறது. அதனால் விரைவில் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கு நேரடி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment