புதிய பாடத்திட்டத்துக்கு வினாவங்கி எப்போது? பெற்றோர், மாணவ மாணவியர் எதிர்பார்ப்பு


புதிய பாடத்திட்டம் மாற்றிய பிறகு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வே நடத்தாத நிலையில், விரைவில் வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற, பயனுள்ளதாக இருக்கும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 2019ல், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டது.


புளூ பிரிண்ட் இல்லாமல், முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அட்டவணை வெளியிட்டு, தேர்வு நெருங்க இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது.கடந்தாண்டும் பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


இதற்காக, ஹைடெக் லேப் மூலம் ஆன்லைன் வழியாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.பாடத்திட்டம் குறைக்கப்பட்டதோடு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் மூலம், மாணவர்களை தயார்ப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, வினாவங்கி வெளியிட வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், 'பள்ளிகள் செப்., மாதம்தான் திறக்கப்பட்டன. எல்லா பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடக்கவில்லை. சிலபஸ் குறைக்கப்பட்டாலும், புளூ பிரிண்ட் இல்லாததால், வினாவங்கி வெளியிட்டால் தான் பயிற்சி பெற பயனுள்ளதாக இருக்கும். கணிதப்பாடத்திற்கு பயிற்சி வினாக்கள் தான் முழு மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும். விரைவில் வினாவங்கி வெளியிட வேண்டும்' என்றனர்

Comments

Popular posts from this blog