தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத் திட்டம்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு



தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வுக்குரிய பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் ஆகியவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழித் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசுப் பணி வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


தமிழ்மொழி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, தேர்வர்களின் இதர விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. குருப்-4 தேர்வில் மட்டும் தமிழ்மொழி தகுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண், தரவரிசைப் பட்டியலுக்கு கணக்கில்கொள்ளப்படும். இதர போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும்.


குருப்-1, குருப்-2 மற்றும் 2-ஏ தேர்வுகள் உட்பட முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கிய அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ்மொழி தகுதித் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையிலும், குருப்-4 மற்றும் ஒரே நிலை தேர்வு கொண்ட தேர்வுகளுக்கு கொள்குறிவகையிலும் வினாத்தாள் அமைந்திருக்கும்.


மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுகால அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது.


அதன்படி, அடுத்த ஆண்டு அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 32 போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ்மொழித் தாள் தேர்ச்சி கட்டாயமாகும்.


இந்நிலையில், கட்டாய தமிழ்மொழித் தகுதித் தேர்வில் விரிவாக விடையளிக்கும் தேர்வு மற்றும் கொள்குறிவகை தேர்வு, தமிழ்மொழித் தகுதித் தேர்வு மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (குருப்-4 தேர்வு) ஆகியவற்றுக்கான பாடத் திட்டங்களையும், மாதிரி வினாத்தாள்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது இணையத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது.


முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளை உள்ளடக்கிய தேர்வுகளுக்கு விரிவாக விடையளிக்கும் வகையிலும், ஒரேநிலை தேர்வுகளுக்கு கொள்குறி வகையிலும் வினாத்தாள் அமைந்திருக்கும்.

Comments

Popular posts from this blog