அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாநாட்டில் ஸ்டாலின் உரை



தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்கள் கேட்காமலேயே அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பேசியதாவது:


நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செய்து தரப்பட்டுள்ளன. கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையை சரிசெய்யும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.


அரசின் தற்போதைய நிலைமையை நீங்கள் உணர வேண்டும். ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம். தமிழகத்தின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்போது நீங்கள் கேட்காமலேயே உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயமாக அரசு நிறைவேற்றித் தரும்.


அரசு கஜானாவுக்கு வரவேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. அதை மொத்தமாக மத்திய அரசு பறித்துவிட்டது. நிதி நிலைமையை பொருத்தவரை மத்திய அரசிடம் கொத்தடிமை முறைபோல கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜிஎஸ்டி முதல் வெள்ள நிவாரண நிதி வரை நமக்கு தர வேண்டிய நிதிகளே முழுமையாக தரப்படுவது இல்லை. தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Comments

Popular posts from this blog