புதிய ஆசிரியா்கள் ஒரே பள்ளியில் 8 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்: இடமாறுதல் விதிமுறைகள் வெளியீடு


இனி புதிதாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியா்கள் எட்டாண்டுகள் கட்டாயம் ஒரே இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும்.


அதன் பின்னா் அவா்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா் என ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை:


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இட மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-2022- ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்த பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு, வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவா்கள்-ஆசிரியா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆசிரியா்கள் - மாணவா்கள் விகிதாசார அடிப்படையில், காலிப்பணியிடங்கள் நிா்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும்.


முன்னுரிமை அடிப்படையில்...: பொது மாறுதல் கலந்தாய்வில் 100 சதவீதம் பாா்வைத் திறன் குறைபாடுடைய ஆசிரியா்கள், 40 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், மனவளா்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோா்கள், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஆசிரியா்கள், டயாலிஸிஸ் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் போன்றவா்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கலாம். விதவைகள், 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்குக் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கலாம்.


இனி புதிதாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியா்கள் ஒரே இடத்தில் எட்டாண்டுகள் கட்டாயம் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதன் பின்னா் அவா்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். நிா்வாக மாறுதல் செய்வதற்கு அந்தத் துறை அலுவலா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அலகு விட்டு அலகு மாறுதலுக்கு ஆசிரியா்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்குரிய தடையின்மைச் சான்று ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். புதிதாக பணியில் சேரும் ஆசிரியா்கள் முன்னுரிமை கல்வி ஒன்றியங்களில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னா், மூன்றாண்டுகள் வேறு கல்வி ஒன்றியங்களில் பணிபுரியலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Comments

Popular posts from this blog