அரசு பள்ளிகளில் 31-ந்தேதிக்குள் பாலியல் புகார் பெட்டி அமைக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் பள்ளிகளில் தற்போது பாலியல் புகார் எழுந்து வருகிறது. இதையடுத்து பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் வருகிற 31-ந்தேதிக்குள் பாலியல் புகார் பெட்டிகளை அமைக்குமாறு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா.சுதன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் ஆரோக்கிய நலனுக்காக 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.7.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் வைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள தற்போது அனுமதி தரப்படுகிறது. மேலும் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன.




அதன்படி மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குழுவின் சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு பற்றிய பயிற்சி பின்னர் வழங்கப்படும்.




பள்ளிகளில் ‘மாணவர் மனசு’ என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். புகார் பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை திறந்து அதில் இருக்கும் புகார்களுக்கு உடனே தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் பள்ளி வளாகங்களில் விழிப்புணர்வு பலகைகளும் வைக்க வேண்டும்.




இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog