வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, கடந்த 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு ஏற்கெனவே மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கைப்படி கால அவகாசம் நீட்டித்து வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி உத்தரவு வெளியிட வேண்டுமென வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் தரப்பு அரசைக் கேட்டுக் கொண்டது.
இதனைக் கவனமுடன் ஆராய்ந்த தமிழக அரசு, கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017 முதல் 2019 வரையில் பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு மூன்று மாதங்கள் சிறப்பு கால அவகாசமும் அளித்து உத்தரவிடுகிறது.
இந்தச் சலுகையைப் பெற விரும்புவோா், அரசாணை வெளியிடப்படும் (டிச.2) நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் விடுபட்ட பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். மூன்று மாதங்களுக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பாக புதுப்பிக்கத் தவறியவா்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
Comments
Post a Comment