எழுத முடியாமல் மாணவர்கள் தடுமாற்றம்! இந்த கொரோனா பாதிப்புக்கு கல்வித்துறை தீர்வு
கோவை: பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பின்பு திறக்கப்பட்டுள்ள சூழலில், பல மாணவர்கள் பேனாவை பிடித்து எழுதுவதில் தடுமாற்றம் அடைவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2020 மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, செப்., 1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றதால், எழுத்து பயிற்சி என்பது மாணவர்களுக்கு சுத்தமாகவே இல்லாத நிலை ஏற்பட்டது.பொதுவாகவே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நேர மேலாண்மையுடன் ஒருங்கிணைந்து மாதிரி எழுத்து பயிற்சிகள் ஆரம்பம் முதலே வழங்கப்படும்.பாடவாரியாக தினந்தோறும் பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். இதனால், பொதுத்தேர்வு சமயத்தில் மாணவர்களுக்கு எழுதுவதற்கு சிரமங்கள் இருப்பதில்லை. தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் முடித்து கடந்த, 20 நாட்களாக நடப்பாண்டுக்கான பாடங்கள் துவக்கப்பட்டு கற்பித்தல் பணி நடந்து வருகின்றன.பயிற்சிக்கான தினத்தேர்வுகளும் துவக்கப்பட்டுள்ளன.
இதில், பெரும்பாலான மாணவர்கள் பேனாவை பிடித்து முழுமையாக ஒரு மணி நேரம் கூட எழுத முடியாமல் சிரமப்படுவதாகவும், அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் பேனாவை பிடித்து எழுதுவதில் சிரமத்தை எதிர்கொள்வதை காணமுடிந்தது. தொடர்ந்து எழுத்து பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வுகள் நடத்துவதற்கு முன் இரண்டு இரண்டு பாடங்களாக, இடைத்தேர்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பாடத்திட்டத்தை, தலைமையாசிரியர்களிடம் கேட்டுள்ளோம். மாணவர்கள் படிக்கும் போது, எழுதி பயிற்சி எடுத்துக்கொள்ளவும் ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.- கீதா, முதன்மை கல்வி அலுவலர்
Comments
Post a Comment