புதுச்சேரி பள்ளிகள் திறப்பு எப்போது?: நமச்சிவாயம் ஆலோசனை
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன், கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.
ஒன்றரை ஆண்டிற்கு பின், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால், கடந்த 8ம் தேதியில் இருந்து, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கி கனமழை பெய்து வந்ததது. அதனால், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால், மீண்டும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆலோசனை நடத்தினார்.கல்வித் துறை செயலர் அசோக்குமார், பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.இருப்பினும் இதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசி, பள்ளி திறப்பு தேதியை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment