அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "நடப்பு கல்வியாண்டில் (2021-22) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் (PTA) மூலம் நிரப்பிக்கொள்ள அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார்.
அதையேற்று பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதியான பட்டதாரிகள் மூலம் நிரப்பிக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி பள்ளியின் தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுநிலை ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம்.
அத்தகைய முதுநிலை ஆசிரியர்கள் 5 மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மட்டும் பணியில் நீடிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்காக 5 மாதங்களுக்கு தேவையான ரூ.13.87 கோடி நிதியும் விடுவிக்க ஆணை வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment