ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூனில் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வின் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலி யாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஜூன் 23-ம் தேதி தேர்வு நடத் தப்பட்டது. இந்த நிலையில், இத் தேர்வு தொடர்பாக மதுரை டயானா, சென்னை குழந்தைவேல், ரோஹிணி, விழுப்புரம் விஜய குமார், ஞானவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:
கணினி ஆசிரியர் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. ‘தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்துவிட்டு, தேர்வை ஆங்கி லத்தில் நடத்தியது ஏற்புடையது அல்ல. மேலும், எந்த மொழியில் தேர்வு நடத்தப்படும் என்பது குறித்தும் முறையாக அறிவிக்க வில்லை. இதுபோன்ற குளறுபடி கள் நடந்துள்ளதால், இத்தேர்வை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந் தது.
நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
* மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா: இந்த ஆன்லைன் தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும் என்று அறிவிப்பாணையில் குறிப்பிடப் படவில்லை. தேர்வுக்கு ஒரு வாரம் முன்பாக அனுப்பப்பட்ட நுழைவுச்சீட்டில், ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. முதுகலை படிப்பு வரை தமிழ் வழியில் கணினி அறிவியல் தேர்வு நடத்தப்படும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் இத் தேர்வை நடத்தாமல் புறக்கணித் துள்ளது. இதனால், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும், தமிழ் வழியில் தேர்வு நடத்தப்படாததால் மனுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆஜரான சிறப்பு வழக் கறிஞர் சி.முனுசாமி: தமிழகம் முழுவதும் இத்தேர்வை 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் எழுதியுள்ளனர். முதுகலை பட்டதாரிகளுக்கான இத்தேர்வை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த முடியும். தேர்வு எழுதுவதற்கு முன்பு மனுதார்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தேர்வை எழுதிவிட்டு, தற்போது தமிழில் நடத்தவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே இது ஏற்புடையது அல்ல. தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் உள்ளது. மனுதாரர்கள் 5 பேருக்காக, தேர்வு எழுதிய 30 ஆயிரம் பேர் பாதிக்கப்படக் கூடாது. எனவே, இதுதொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ‘‘மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் முக்கிய போட்டித் தேர்வுகளையே தமிழில் எழுத அனுமதிக்கும்போது, மாநில அளவிலான தேர்வில் ஏன் தமிழை அனுமதிக்கவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
Comments
Post a Comment