ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஏன் இவ்வளவு பேர் ஃபெயிலானார்கள்?

கல்வி வட்டாரத்தில் இரண்டு நாள்களாகக் கடுமையான விமர்சனத்திற்குள்ளாயிருக்கும் விஷயம் டெட் தேர்வு முடிவுகள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணியாற்ற தகுதித்தேர்வு எழுதுவது அவசியம் என, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 8-ம் தேதி 1 முதல் 5 வகுப்பு வரைக்குமான ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட் - முதல் தாள்) ஜூன் 9-ம் தேதி 6 முதல் 8 வகுப்பு வரையிலான ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட் - இரண்டாம் தாள்) நடைபெற்றன. இந்தத் தேர்வுகளில் லட்சணக்கானவர்கள் எழுதினர். இத்தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் 20 மற்றும் 22-ம் தேதிகளில் வெளியானது.


ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 1,62,313 பேர் எழுதியிருந்த நிலையில், தேர்ச்சிப் பெற்றவர்கள் 482 பேர் மட்டுமே. அதேபோல, ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளை 3,79,733 பேர் எழுதியிருந்த நிலையில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கை 1 சதவிகிதத்தைத் தாண்டவில்லை. இதுபோல தேர்ச்சியின்மை இதற்கு முன் நடந்திருக்குமா என்பது பெரும் சந்தேகம். ஏன் இப்படி குறைவானவர்களே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்ற விவாதம் எங்கும் நடந்துவருகிறது.


சமூக ஊடகங்களில் கல்வித் தொடர்பாக எழுதிவருபவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி குறைந்ததற்கான காரணமாக, அரசு முறையாகத் தேர்வு தேதிகளை வெளியிடவில்லை, தேர்வுக்குப் படிப்பதற்கான கால அவகாசம் போதுமானதாக இல்லை உள்ளிட்டவற்றைக் கூறிவருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் ஆ.சந்துரு எழுதியிருப்பது வேறு கோணத்தில் பார்க்க வைக்கிறது.


``டெட் தேர்வுக்கான பாடப்பகுதியில் கல்வி உளவியல் தவிர மற்ற பாடங்கள் தேர்வு செய்வதற்கு ஆசிரியர்கள் இடையே மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. UG, B.Ed ல் பயின்ற பாடங்கள் மிகவும் குறைந்த அளவு கேள்விகளும், பயிலாத பாடங்கள் அதிக அளவிலான கேள்விகளும் TET அமைப்பு என்ற நிலைப்பாடு தமிழக அரசு எடுத்தது. உதாரணமாக, B.Sc விலங்கியல் படித்த ஒரு ஆசிரியர் B.Ed முடித்திருப்பின் அவர் இயற்பியல் வேதியியல் தாவரவியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் மற்றும் கணிதம், தமிழ், ஆங்கிலம், கல்வி உளவியல் போன்ற பாடங்களில் கேட்கப்படும் 150 கேள்விகளுக்குப் பதில் தர வேண்டிய சூழல்.

மேலும் ஓர் உதாரணமாக BA தமிழ் படித்த ஆசிரியர் தமிழில் 30, ஆங்கிலத்தில் 30, உளவியலில் 30, சம்பந்தமே இல்லாத சமூக அறிவியலில் 60 என 150 மதிப்பெண்களுக்குப் பதில் தர வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

மேலும், ``TET பாடத்திட்டத்தை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டது. அவைதாம் தேர்வில் கேட்கப்படும் என்றிருந்த வேளையில் அப்பாடத்திட்டத்தைத் தாண்டி 11, 12 மற்றும் கல்லூரி அளவிலான பாடங்களிலிருந்து வினாக்கள் அமைந்திருந்தன. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தேர்வுக்குத் தயாரான ஆசிரியர்களுக்கு இது கடினமாகவே இருந்தது" என்று குறிப்பிடுகிறார்.


நம்மிடம் பேசிய சில ஆசிரியர்களும், வினாத்தாள் மிகக் கடுமையாகத் தயாரிக்கப்பட்டதாகவே கூறினர் . மேலும் , ``B.Ed இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள் TET தேர்வு எழுதலாம் என்ற விதி இருந்த நிலையில் B.Ed தேர்வு நாளில் இந்தத் தேர்வுகளும் வந்தன. அதனால், தங்களால் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால்தான் தங்களால் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை" என்றும் கூறுகின்றனர்.

``இன்னொரு பக்கம், ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கே பணி வாய்ப்பு இல்லாத நிலையில் புதிதாகத் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டும் எங்கிருந்து வேலை கிடைக்கப்போகிறது என்ற சந்தேகமும் பலருக்கும் உள்ளது. அதனால், தேர்வு எழுதுவதில் வழக்கமான ஆர்வத்துடன் எழுதுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதனாலும் தேர்ச்சி விகிதம் இவ்வளவு குறைந்திருக்கலாம்" என்றார் ஆசிரியர் ஒருவர்.


இவை குறித்து கல்வித் துறை வட்டாரத்திடம் பேசினோம். ``வினாத்தாள் எப்போதும் தயாரிப்பதைப் போலவே தயாரிக்கப்பட்டது. மேலும், தேர்வு தயாராவதில் பலர் சுணக்கமாக இருந்ததைக் கவனிக்க முடிந்தது. பி.எட் கல்லூரிகளின் கல்வி போதிப்பது பற்றிய கேள்விகளையும் இங்கே எழுப்ப வேண்டியது அவசியம்" என்றனர்.

காரணங்கள் என்னவாக இருந்தாலும் ஆசிரியர் தகுத்தேர்வு வெறுமனே நடக்கும் சம்பிரதாயம் என்கிற நிலை வந்துவிடக் கூடாது என்பதே பலரின் கருத்து.

Comments

Popular posts from this blog