ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடைகோரிய வழக்கு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டெட்) தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பரமானந்தம், சக்திவேல் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) நடத்தி வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் தகுதிச்சான்று ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வழிமுறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில் பிரதான பாடத்தில் இருந்து 30 சதவீத கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது. எஞ்சிய கேள்விகள் பொதுஅறிவு, திறனறிவு தொடர்பாக உள்ளது.
இதனால் பிரதான பாடத்திற்கான கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்காதவர்கள் கூட குறைந்தபட்ச மதிப்பெண்ணான 90ஐ பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. எனவே பிரதான பாடத்தில் குறைந்தபட்சம், அதிகபட்சம் மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும்.
தேசிய அளவில் நடத்தப்படும் நெட் மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் போன்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிரந்தரமாக சான்று வழங்கப்படும்போது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மட்டும் 7 ஆண்டுகளை நிர்ணயம் செய்வது என்பது சட்டவிரோதமானது. எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கும் நிரந்தர சான்றிதழ் அளிக்க தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பிரதான பாடத்தில் கட்டாயம் இவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயம் செய்யாவிட்டால், பிரதான பாடத்தில் எந்த மதிப்பெண்ணும் எடுக்காதவர்களும் கூட அந்த பாடங்களுக்கு ஆசிரியர்களாகி விடுவர்.
எனவே பிரதான பாடத்திற்கு, மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். ஸ்லெட், நெட் தேர்வு எழுதி ஒருமுறை தேர்ச்சி பெற்றுவிட்டால் அதன் செல்லுபடிதன்மை ஆயுட்காலம் வரை தொடர்கிறது. அதேபோல ஆசிரியர் தகுதித்தேர்விலும் ஒருமுறை தேர்ச்சி என்ற முறையைக் கொண்டு வர வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் ‘ஏற்கனவே 1,500 ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து விட்டு தேர்வு எழுத காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் இந்த தேர்வுக்கு தடை விதிக்க கூடாது. அதேபோல கேள்வித்தாள் எப்படி அமைய வேண்டும் என்பதை அரசும், கேள்வித்தாளை வடிவமைத்த நிபுணர்களும்தான் நிர்ணயம் செய்ய முடியும். விண்ணப்பதாரர்கள் அதை தீர்மானிக்க முடியாது’ என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Comments
Post a Comment