301 மையங்களில் நாளை நடக்கிறது 20 லட்சம் பேர் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு

20½ லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் குரூப்-4 
தேர்வு 301 மையங்களில் நாளை நடக்கிறது. இந்த 
தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தேர்வாணைய வரலாற்றில் 20½ லட்சத்துக்கும் மேற்பட்ட 
விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் 
குரூப்-4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற 
உள்ளது. 1¼ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு 
பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த தேர்வு 
நடக்கிறது.

மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுத 
அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழகம் 
முழுவதும் 301 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

சென்னையில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர் தேர்வு 
எழுதுகிறார்கள். இந்த தேர்வை கண்காணிக்க 685 
பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 
தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், 
விருப்பப்பாடம், தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய 
தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள 
விடைத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 
இதன் மூலம் முறைகேடுகள், தவறுகள் குறைவதுடன், 
தேர்வு முடிவுகள் வெளியிட தேவையான கால 
அவகாசமும் குறையும்.

நுழைவுச்சீட்டில் தெரிவித்துள்ளபடி தேர்வர்கள் 
வினாத்தாளில் விடையினை குறித்தல் தடை 
செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் 
விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை 
கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு காலம் 
சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தேர்வு நேரத்திற்கு 
பிறகு 5 நிமிடம் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூடங்களில் இருந்து தேர்வு நடவடிக்கைகள் 
அனைத்தும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு 
செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் தடையில்லா
 மின்சாரம் வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் 
மூலம் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவரும் 
வகையில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை 
கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து 
துறையினருக்கு கலெக்டர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர், நினைவக
 குறிப்பு, புத்தகங்கள், பதிவு செய்யும் உபகரணங்கள் 
போன்ற எந்த சாதனங்களும் தேர்வு அறைக்குள் 
அனுமதி இல்லை. கைக்கெடிகாரம், மோதிரம் 
போன்றவையும் அணியக்கூடாது. இதனை மீறினால் 
தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது.

தேவை ஏற்பட்டால் தேர்வர்கள் முழுமையான உடல் 
பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேர்வுக்கூட 
நுழைவுச்சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக 
தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இத்தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog