கிராம நிர்வாக அலுவலர், குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்–4, கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான தேர்வை அடுத்த ஆண்டு பிப்ரவரி 11–ந் தேதி நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க 13–ந் தேதி கடைசி நாள் என நிர்ணயிக்கப்பட்டது.
இத்தேர்வுக்கு தேர்வாணைய வரலாற்றிலேயே முதல்முறையாக 18 லட்சத்து 33 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இருப்பினும் ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டும், இதர விண்ணப்பதாரர்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 20–ந் தேதி கடைசி நாள் என காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த 21–ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு தொடர்பாக ஆயத்தப்பணிகள் நடந்து வருவதாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளதாலும் இதன்பிறகு எக்காரணம் கொண்டும் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. எனவே அனைத்து மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment