டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'


தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், டிப்ளமா ஆசிரியர் படிப்பான, டி.டி.எட்., நடத்தப்படுகிறது. இதில், மாணவர்களை சேர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 12 ஆயிரம் இடங்களுக்கு, இதுவரை, 1,200 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து 800 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதி வரை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன கல்லுாரிகளில், மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக, தங்கள் சான்றிதழ்களை எடுத்து சென்று, ஆசிரியர் டிப்ளமா படிப்பில் சேரலாம்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog