மருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தற்போதைய நிலை தொடர ஐகோர்ட் உத்தரவு
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நளினி சிதம்பரம் ஆகியோர் ஆஜராகினர். அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆஜராகி, நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளை மக்கள் தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் 4.2 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 4000 மாணவர்கள் மட்டுமே பிளஸ் 2 தேர்வு எழுதினர்.கிராமப்புறங்களில் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகள் மிகக்குறைவு. நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 80 ஆயிரம்பேர் தேர்வு எழுதினர்.
இதில் 2000 பேர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். சிபிஎஸ்சி மாணவர்கள் 2000 பேர் தேர்வு எழுதியதில் 520 பேர் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் உள் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக சேர்க்கை கிடைக்கும். எனவே, தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதுவரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Comments
Post a Comment