நீல நிறத்தில் பிளஸ் 2 சான்றிதழ் : தமிழில் மாணவர், பள்ளி பெயர்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம், நேற்று துவங்கியது. முதல் முறையாக, மாணவர், பள்ளிகளின் பெயர்கள், தமிழில் இடம் பெற்றிருந்தன. 

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, மே, 12ல் தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது, ஆன்லைன் மூலம், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின், மறுமதிப்பீடு, மறுகூட்டல் பணிகள் முடிந்து, திருத்திய மதிப்பெண்களுடன், இறுதி மற்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று முதல் வழங்கப்படுகிறது.

தேர்வுத்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும், இரு தினங்களுக்கு முன்னதாகவே, சான்றிதழ் கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. பள்ளி பதிவேடுகளில் மாணவ, மாணவியர் கையெழுத்திட்டதும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அங்கேயே, பிளஸ் 2 சான்றிதழின் படி, வேலை வாய்ப்புக்கான பதிவு பணிகளும் துவங்கி உள்ளன.

மாணவ, மாணவியர் தங்களின், 10ம் வகுப்பு வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை நகல், மொபைல் எண்ணுடன் பள்ளிகளில், வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம். வரும், 24ம் தேதி வரை பதியும் அனைத்து மாணவர்களுக்கும், ஒரே பதிவு மூப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், போலிகளை தடுக்க, ஒவ்வொரு முறையும் வண்ணம் மற்றும் வடிவம் மாற்றப்படும்.

இந்த ஆண்டு, நீல வண்ணத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், முதலில் தமிழிலும், பின் ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. மாணவரின் புகைப் படம், சான்றிதழ் வரிசை எண், அசல் சான்றிதழ் ஆய்வுக்கான பார்கோடு குறியீடு, அரசு மதிப்பெண் பட்டியல் எண், தேர்வு பதிவு எண், 10 இலக்க நிரந்தர பதிவு எண், பிறந்த தேதி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பள்ளியின் பெயர், மாணவர் படித்த கல்வி மாவட்ட குறியீட்டு எண் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Comments

Popular posts from this blog