பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேவையற்றது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் தூக்கமின்றி கடினமாக உழைக்கிறார்கள். அதற்காக தினசரி பள்ளி முடிந்த பின்பு டியூசனுக்கு சென்றும் படிக்கின்றனர். இதேபோல பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கஷ்டப்படுகிறார்கள்.



இந்த நிலையில் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்திற்கு ஆளாவார்கள். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவதுடன், விரக்தி அடைந்துவிடுவார்கள்.

எனவே பிளஸ்-1 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “போட்டிச்சூழல் அதிகம் உள்ள நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் 2 ஆண்டுகள் பிளஸ்-2 பாடத்தை படிக்கின்றனர். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்று பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லூரியின் முதலாம் ஆண்டில் சிரமப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்வி ஆலோசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது” என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments

Popular posts from this blog