முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பாணை விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜூலை 2 -இல், 1,663 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையை மே 9 -ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்வதற்கு மே 30 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையில், ஒரு கை, கால் மற்றும் இரண்டு கால்கள் 40 முதல் 70 சதவீதம் வரை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும், அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைபாடு அளவை நிர்ணயித்தது, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றிய நிலையில், இதற்கு முரணாக 3 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது.
உடலில் 70 முதல் 100 சதவீதம் பாதித்தவர்கள் விண்ணப்பம் செய்ய தகுதியில்லை என்று கூறுவது, கடந்தாண்டு மார்ச் 2 -இல் மாற்றுத் திறனாளிகள் துறை வெளியிட்ட அரசாணைக்கு எதிரானது.
எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்வதோடு, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் எனக் கூறி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 2 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Comments

Popular posts from this blog