ஜூன் 23 முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு; மே 29 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 -ஆம் தேதி முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை பிளஸ்-2 துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மே 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 1 (வியாழக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் பிரௌசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை: தனித்தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ஐ சேர்த்து பணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக் கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தாற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படும்.
சிறப்புத் தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1.15 வரை நடைபெறும். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள தேர்வுக்கான கால அட்டவணை:
ஜூன் 23 ---- வெள்ளிக்கிழமை ---- மொழிப்பாடம் 1
ஜூன் 24 ---- சனிக்கிழமை -------- மொழிப்பாடம் 2
ஜூன் 27 ---- செவ்வாய்க்கிழமை -- ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 28 ---- புதன்கிழமை -------- ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 29 ---- வியாழக்கிழமை ----- வேதியியல்,
கணக்குப்பதிவியல்
ஜூன் 30 ---- வெள்ளிக்கிழமை ---- வணிகவியல், மனையியல்
ஜூலை 1 ---- சனிக்கிழமை ------- கணிதம், விலங்கியல்,
நுண்ணுயிரியல்,
ஊட்டச்சத்து-சமச்சீர் உணவியல்
ஜூலை 3 ---- திங்கள்கிழமை ----- தொடர்பியல் ஆங்கிலம்,
இந்திய கலாசாரம்,
கணினி அறிவியல்,
உயிரி வேதியியல்,
சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்)
ஜூலை 4 ---- செவ்வாய்க்கிழமை -- அனைத்து தொழிற்கல்வி பாடங்கள்,
அரசியல் அறிவியல், செவிலியர்
(பொது), புள்ளியியல்
ஜூலை 5 ---- புதன்கிழமை -------- உயிரியல், வரலாறு,
தாவரவியல், வணிக கணிதம்
ஜூலை 6 --- வியாழக்கிழமை -----இயற்பியல், பொருளியல்

    Comments

    Popular posts from this blog