அடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்
அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், மொட்டை கடிதம் போல, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. பதினோரு அடுக்கு மாடி கட்டடத்தில், பயன்படுத்தப்படாத கிடங்கு போல, ஆள் அரவமற்ற நிலையில், இந்த அலுவலகம் செயல்படுகிறது.
இங்கு செல்லும் பட்டதாரிகள், எந்த தகவல்களை கேட்டாலும், 'இணையதளத்தை பாருங்கள்; பத்திரிகைகளை பாருங்கள்' எனக்கூறி அனுப்பி விடுகின்றனர். இணையதளமோ, மொட்டை கடிதம் போல, அடிப்படை தகவல்கள் ஏதுமின்றி, வெறும் அறிவிப்புகள் மட்டுமே, ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன.
டி.ஆர்.பி., வரலாறு, செயல்பாடு, அதிகாரிகள், உறுப்பினர்கள் விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யாரை அணுக வேண்டும், அவர்களின் பெயர் மற்றும் முகவரி, 'டெட்' தேர்வை அறிமுகம் செய்த அரசாணை, 'டெட்' தேர்வின் முந்தைய அறிவிப்புகள், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் போன்ற விபரங்கள் இல்லை.
பொது அலுவலருக்கான தொடர்பு எண், செய்தி தொடர்பாளர் யார், அவரது தொலைபேசி எண்ணும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒரு இணையதளத்தில், எந்தெந்த அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும், இதில் இல்லை.விதிகளின் படி, இணையதளத்தையே பராமரிக்க தெரியாத, டி.ஆர்.பி., அதிகாரிகள், வருங்கால சந்ததிகளை உருவாக்கும், ஆசிரியர்களின் பணி நியமனத்தை எந்த அளவுக்கு தரமாக நடத்த முடியும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழை மறந்த அவலம் : தமிழகத்தில், அரசாணை மற்றும் அறிவிப்புகளை, தமிழில் வெளியிடுவது கட்டாயமாகும். ஆனால், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், தமிழ் மொழி மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம்
பேரை பணி நியமனம் செய்யும், டி.என்.பி.எஸ்.சி.,யின்
இணையதளத்தை பார்த்தாவது, டி.ஆர்.பி., கற்றுக்கொள்வது நல்லது.
Comments
Post a Comment