ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் 4–வது நாளான நேற்று 
வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் 4–வது நாளான நேற்று
 வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். 
இளைஞர்கள், பொதுமக்களும் குவிந்ததால் புதுவையே ஸ்தம்பித்தது.
நிரம்பி வழிந்த திடல்

புதுச்சேரியில் கடந்த 17–ந்தேதி மாலை முதல் ரோடியர் மில் திடலில் 
கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு 
வருகின்றனர். விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டம்
 4–வது நாளாக நேற்று நீடித்தது. காலை 8 மணி முதலே மாணவ, 
மாணவிகள் ரோடியர் மில் திடல் நோக்கி சாரைசாரையாக வந்த 
வண்ணம் இருந்தனர்.

மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று முழுஅடைப்பு 
என்பதால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடாத 
நிலையில் ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்த 
ரோடியர் மில் திடலுக்கு நடந்து வந்து கலந்து கொண்டனர். 
இதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்களிலும் வந்து குவிந்தனர். 
பெற்றோர் பலர் தங்களது 2 சக்கர வாகனங்களில் மாணவர்களை 
கொண்டு வந்து விட்டனர்.

மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள், 
பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆயிரக்கணக்கில்
 வந்து கலந்து கொண்டதால் ரோடியர் மில் திடல் நிரம்பி வழிந்தது. 
இதற்கு முன் இல்லாத அளவுக்கு நேற்று அதிக அளவில் 
கூட்டம் காணப்பட்டது.புதுவை ஸ்தம்பித்தது

இசைவாத்தியங்கள் முழங்க மாணவர்கள் மத்திய அரசு மற்றும்
 பீட்டாவுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியபடி போராட்டம் 
நடந்த இடத்துக்கு அணி அணியாக வந்தனர். அங்கு போடப்பட்டு
 இருந்த சாமியானா பந்தல்களில் அமர்ந்து ஜல்லிக்கட்டை
 ஆதரித்தும், தடையை கண்டித்தும் அவர்கள் கோ‌ஷங்கள் 
எழுப்பியபடி இருந்தனர்.

காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மாணவர்கள் சாரை 
சாரையாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டதால் 
ரோடியர் மில் திடல், கடலூர் ரோடு பகுதியில் எங்கு பார்த்தாலும் 
மாணவ, மாணவிகள் பட்டாளமாகவே காணப்பட்டது.

புதுவையில் பல்வேறு பிரச்சினைகளுக்காக இதுவரை நடந்த 
போராட்டங்களில் இதுபோல் கூட்டம் கூடவில்லை என்ற 
அளவுக்கு மாணவர்கள் கூடி எழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடாததாலும், 
மாணவர்கள் போராட்டத்தாலும் நேற்று புதுவை ஸ்தம்பித்தது.
மாணவர்கள் விளக்கம்

தொடர்ந்து மாணவர்கள் பாட்டுப் பாடியும், ஜல்லிக்கட்டை ஆதரித்தும்,
 மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பிய படி
 இருந்தனர். ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற எடுக்கப்பட வேண்டிய 
நடவடிக்கைகள் குறித்தும், பீட்டாவின் சூழ்ச்சி குறித்தும் சில 
மாணவர்கள் விளக்கிப் பேசினார்கள்.

கரை வேட்டிக்கு அனுமதி மறுப்பு

மாணவர்களின் போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த 
முக்கிய நிர்வாகிகள் போராட்ட களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். 
ஆனால் கட்சி கரைபோட்ட வேட்டி, சட்டை அணிந்து வந்தவர்கள் 
ரோடியர் மில் திடலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் நேற்று பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் 
பேண்ட், சட்டை அணிந்து வந்து மாணவர்களின் போராட்டத்துக்கு 
ஆதரவு தெரிவித்தனர். ஆனால் மாணவர்கள் மத்தியில் பேச 
அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வணிகர்கள், ஆட்டோ, டெம்போ டிரைவர்கள், 2 சக்கர வாகன 
மெக்கானிக்குகள் என பல்வேறு தரப்பினரும் ஊர்வலமாக வந்து
 போராட்டத்தில் கலந்து கொண்டனர். தெருக்கூத்து கலைஞர்கள்
 பல்வேறு வேடமணிந்து ஆடிப்பாடி ஊர்வலமாக வந்து ஆதரவு
 தெரிவித்தனர்.– (பாக்ஸ்) குப்பைகள் சேருவதை தடுக்க தனிக்குழு

போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பல்வேறு 
அமைப்புகள் சார்பில் காலையிலும், மதியமும் உணவுப் பொட்டலங்கள், 
பிஸ்கெட், தண்ணீர் பாக்கெட்டுகள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டன.
 போதும் போதும் என்கிற அளவுக்கு உணவு வகைகள் வாகனங்களில்
 கொண்டு வந்து இறக்கிய வண்ணம் இருந்தனர்.

இந்த உணவுப் பொட்டலங்களை வாங்கி மாணவர்கள் உற்சாகத்துடன் 
சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். சாப்பிட்ட கழிவுகளை தூக்கி 
எறிந்து விடாமல் தடுத்து ஒரே இடத்தில் அந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு
 அப்புறப்படுத்தப்பட்டன. இதற்காக மாணவர்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி
 இருந்தனர். இதனால் போராட்டம் நடந்த இடத்தில் குப்பைகள் சேருவது
 தவிர்க்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு காளை சிலை

போராட்ட திடலில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற 
கட்–அவுட் வைக்கப்பட்டு இருந்தது. இதுதவிர ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்
 வாசகங்கள் அடங்கிய பேனர்கள் கட்டப்பட்டு இருந்தன. தற்போது 
புதிதாக சீறிப்பாயும் வடிவில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று 
மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு சிலையாக வைக்கப்பட்டு இருந்தது
.

Comments

Popular posts from this blog