'நீட்' தேர்வு: அடுத்த வாரம் விண்ணப்ப பதிவு
மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன், 'மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி களிலும், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்வு தேர்ச்சி கட்டாயம்' என, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதற்கு, தமிழகம் உட்பட பல மாநிலங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள, அரசு கல்லுாரிகளில், மாநில அரசின் ஒதுக்கீட்டு இடங்களில், கடந்த ஆண்டு சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், தனியார் கல்லுாரி இடங்களை, 'நீட்' தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நிரப்ப உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் கல்லுாரி களுக்கும், 'நீட்' தேர்வு கட்டாயம் என்ற நிலையே உள்ளது. கடைசி நேரத்தில், மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் விலக்கு அளிக்கப்படலாம்.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த வாரம் முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கும் என, தெரிகிறது. ஜன., முதல் வாரம் வரை, விண்ணப்பத்தை பதிவு செய்ய, அவகாசம் வழங்கப்படலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., ஒரு வாரத்திற்குள் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment