85 பணியிடங்களுக்கு குரூப்–1 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது

சென்னை,

85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

குரூப்–4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

வருகிற 6–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்–1

இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள 22 பணியிடங்கள் வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த குரூப்–1 பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

பிப்ரவரியில் தேர்தல்

85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 9–ந்தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog