நாளை குரூப் 4 தேர்வு: நவீன கருவிகளுக்கு அனுமதி மறுப்பு

குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை எழுதுவோர் செல்லிடப்பேசி உள்ளிட்ட நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
5,451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 6) நடைபெறும் தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்:-
301 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கூட நுழைவு சீட்டை www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்ப எண்-பயனாளர் குறியீடு, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் இணையதளத்திலேயே அறியலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்யும் முன்பு, பாப்-அப் எனும் நிலை அடைக்கப்பட்டிருந்தால் அதனை மாற்றி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக் கூடத்துக்குள் நுழையும்போதும், அறைக் கண்காணிப்பாளர் கேட்கும்போதும் தேர்வர்கள் அனுமதிச் சீட்டை காண்பிக்க வேண்டும். உடன் வரும் பெற்றோர் உள்ளிட்டோருக்கு அனுமதி கிடையாது.
செல்லிடப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் தேர்வுக் கூடத்துக்குள் எடுத்துவரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. மீறி வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
தேர்வு மையத்தை மாற்றவோ, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப் பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை. தேர்வாணைய அறிவுரைகளை தேர்வுக்கு வரும் முன் கவனமாகப் படித்துவிட்டு வர வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog