கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்.

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தைஎட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... :
ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

எப்படியாவது... :
அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பானஉத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog