நாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது நாட்டில் கல்விக் கொள்கை முறையாக அமல்படுத்தப்படவில்லை. அடுத்தடுத்து அமைந்த அரசுகளும் அதனை முறையாக மறுஆய்வு செய்யவில்லை. முக்கியமாக 1976-ஆம் ஆண்டுக்குப்பிறகு கல்விக்கொள்கை மறுஆய்வு செய்யப்படவே இல்லை.

இப்போதைய அரசு கல்வித் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து வருகிறது. உயர் கல்வியைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்களில் இணைக்கப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கல்வித் தரத்தைப் பேண முடிவதில்லை என்ற பிரச்னை உள்ளது. இதனைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும்தான் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

உயர் கல்வியில் தரத்தைப் பேணுவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை அளித்து வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் சர்வதேச கல்வி நிலையங்களுடன் நமது மாணவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஆசிரியர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பது உண்மைதான். பல ஆண்டுகளாக நியமனத்தில் ஏற்பட்ட தாமதத்தால், நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பணியிடங்களை விரைவாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் மகேந்திர நாத் பாண்டே.

Comments

Popular posts from this blog