DTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி

டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என, 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 830 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, இந்த ஆண்டு வெறும், 3,500 விண்ணப்பங்களே வந்துள்ளன.இதில், 3,170 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது;9ம் தேதி வரை நடக்கிறது.

மிகக் குறைந்த விண்ணப்பங்கள்வந்ததன் மூலம், இந்த ஆண்டு, 10 ஆயிரத்து, 660 இடங்கள் காலியாக உள்ளன. அதனால், இந்த கல்லுாரிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. தனியார் கல்லுாரிகளில், தற்காலிக ஆசிரியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளனர். அதேபோல், பல தனியார் கல்லுாரிகள், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு முழுக்கு போடவும் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் க.மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: தமிழகத்தில் ஆசிரியர் படிப்பை முடித்து, எட்டு லட்சம் பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வும் நடக்கவில்லை; பணிநியமனமும் இல்லை. அதனால், ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகளில் படித்தாலும், வேலை இல்லாத நிலையே உள்ளது;எனவே, அவற்றை மூடி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog