புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: அன்புமணி

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கல்வியாளர்கள் குழுவைக் கொண்டு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான வல்லுனர் குழு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கையை மக்களின் கருத்தை அறியும் நோக்கில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு கல்வியாளர் தலைமையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐவரில் 4 பேர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், ஒருவர் மட்டுமே கல்வியாளர் ஆவார். புதிய கல்விக் கொள்கையில் சில சாதக அம்சங்கள் உள்ள போதிலும், பாதகமான அம்சங்கள்தான் நிறைய உள்ளன. உயர்கல்விக்குத் தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு அவசியம் என்பதால், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரம் கொண்ட பாடத்திட்டம் இருக்கலாம். ஆனால், ஒரே பாடத்திட்டம் மட்டும் இருக்கக்கூடாது. அது தேவையற்ற கலாசார, மொழித் திணிப்புக்கு வழி வகுக்கும்.

5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி என்பதையும் ஏற்க முடியாது. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும். கல்வி நிறுவனங்களில் அரசு உதவித் தொகை நிறுத்தப்படும் என்ற பரிந்துரையால் ஏழைக் குழந்தைகள் படிக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே, புதிய கல்விக் கொள்கையைக் கல்வியாளர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்து, அதன்பின் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog