B.Ed . படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: இந்த ஆண்டு முதல்முறையாக அமல்

பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பி.எட் படிப்பில் 1,777 இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். இடங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக் கொள்கிறார்கள். பொறியியல் படிப்பில் உள்ளதைப் போன்று பி.எட். படிப்பில் தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்குவதில்லை. தனியார் கல்லூரிகள் விரும்பினால் பொது கலந்தாய்வுக்கு இடங்களை வழங்கலாம். அந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

கடந்த ஆண்டிலிருந்து பிஎட் படிப்பு 2 ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு வரை ஓராண்டு கால படிப்பாகவே பிஎட் இருந்து வந்தது. மேலும், சென்ற கல்வி ஆண்டில் பொறி யியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரும் நடைமுறை அறி முகப்படுத்தப்பட்டது. அதன்படி, பிஇ, பிடெக் பட்டதாரிகள் அறிவியல் பிரிவு அதாவது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ் பிஎட் படிப்பில் சேரலாம்.

பிஎட் மாணவர் சேர்க்கையை பொருத்த வரையில், பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் (பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல் படிப்பு எனில் முதுகலை பட்டம்), உயர் கல்வித் தகுதி, என்சிசி, என்எஸ்எஸ் போன்ற கல்வி அல்லாத இதர செயல்பாடுகளில் ஈடுபாடு ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் மாணவர்கள் கலந்தாய்வுக்குஅனுமதிக்கப்படுவர்.

ஆண்டு தோறும் சென்னை திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே பிஎட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டும் இக்கல்வி நிறுவனத்திடமேகலந்தாய்வு நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2016-17-ம் கல்வி ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டி ருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு முதல் முறையாக பிஎட் படிப்பில் அறிவியல் (இயற்பியல், வேதியியல்) கணிதப் பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக் கப்பட உள்ளது. எஞ்சிய 80 சதவீத இடங்கள் அறிவியல், கணித பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது.

கடந்த ஆண்டுமுதல்முறையாக பொறியியல் பட்டதாரிகள் பிஎட் சேரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர் களுக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு எதுவும் அளிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையிலேயே அறிவியல், கணித பட்டதாரிகளும்பொறியியல் பட்டதாரிகளும் மெரிட் பட்டியலுக்கு சேர்க்கப்பட்டனர்.

தற்போது பொறியியல் பட்டதாரி களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணித பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள் தங்களுக்குப் போட் டியாக இருப்பார்களோ என்று அச்சப்படத் தேவையில்லை. பி.எட். படிப்பில் சேர ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பம் நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,777 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டு 3-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை எம்.எஸ்.தில்லை நாயகி தெரிவித்தார்.மேலும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் எம்எட் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பத்தின் விலை ரூ.50. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தில்லைநாயகி தெரிவித்தார்.பிஎட் படிப்பைப் போன்று எம்எட் இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவதில்லை. எனவே, மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சேர தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments

Popular posts from this blog