3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - தமிழகம் முழுவதும் காலி.
தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் ஒரு ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளுக்குச் சென்று பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாடங்களும் முழுமையாக நடத்த முடியாமல் போவதால், கல்வித் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்களும், பள்ளி ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்..
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சுமார் 3,500 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு அண்மையில் அறிவித்தது..
இந்தப் பணியிடங்களில் 1,750 இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் போட்டித் தேர்வு மூலமாகவும், மீதமுள்ள 1,750 இடங்கள் பதவி உயர்வு மூலமும் (50:50) நிரப்பப்படுகின்றன.காலியான பணியிடங்கள் மட்டும் கடந்த ஆண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டன. ஆனால், போட்டித் தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை..
இந்த நிலையில், நிகழாண்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் காலிப் பணியிட விவரம் பள்ளி கல்வித் துறை சார்பில் சேகரிக்கப்பட்டது. இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டபோதும், இதுவரை போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிடவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகள்கூட தொடங்கப்படவில்லை.இதனால் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பணிச் சுமை அதிகரித்திருப்பதோடு, பாடங்களை முழுமையாக மாணவர்களுக்கு புரிகின்ற வகையில் நடத்துவது பாதிக்கப்பட்டுள்ளது.பிற பள்ளிகளுக்கும் சென்று வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள்: ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக முக்கியப் பாட ஆசிரியர்கள், அவருடைய பள்ளிக்கு அருகிலுள்ள மற்ற பள்ளிகளுக்கும் சென்று பாடம் நடத்த வேண்டிய சூழல் இப்போது உருவாகியிருக்கிறது..
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியது:தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 ஆசிரியர்கள் வீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல் பாடப் பிரிவுகளில்தான் இந்த நிலை..
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் உத்தரவின் பேரில் பல பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் பள்ளிக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கும் சென்று பாடம் நடத்தும் நிலை உருவாகியிருக்கிறது.சில பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக, அந்தந்தப் பகுதியில் உள்ள பட்டதாரிகளை தாற்காலிகமாக பணியமர்த்தி பாடங்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலை காரணமாக, பல அரசுப் பள்ளிகளில் முக்கியப் பாடங்களை மாணவர்கள் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே கற்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது என்றார் அவர்.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை இம்மாத இறுதிக்குள் டிஆர்பி வெளியிட்டால் மட்டுமே, நவம்பர் மாதத்துக்குள்ளாக சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்து பணியிடங்களை நிரப்ப முடியும்.
இந்த வகையில் விரைவான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, குறைந்தபட்சம் 3 மாதங்களாவது அரசுப் பள்ளிகளில் முக்கியப் பாடங்களை முழுமையாக நடத்த முடியும்.லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால்,இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.
Comments
Post a Comment