10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விபரம் சேகரிக்கும் பணி!
பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விவரம் சேகரிக்கும் பணி வழங்கியிருப்பது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், கனமழை காரணமாக,அரையாண்டு தேர்வு ஒத்தி வைத்தது, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சவாலாக உள்ளது. ரிவிஷன் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாத நிலையில், 100 சதவிகித தேர்ச்சி விகிதத்தை, ஒவ்வொரு ஆசிரியரும் வழங்க வேண்டும் என, கல்வித்துறையால் நெருக்கடி தரப்படுகிறது. காலாண்டு, முன்மாதிரி தேர்வு என, ஒவ்வொரு தேர்விலும், தேர்ச்சி விகிதம் குறைந்த பாட ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், 100 சதவிகித தேர்ச்சி பெற வைக்க, ஆசிரியர்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் பணி, ரேஷன் அட்டைக்கு பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிக்கு விவரம் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் உள்ளாட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஏற்கனவே அரையாண்டு தேர்வு ஒத்தி வைத்தது,மழைக்கு விடுமுறை அளித்தது என, பல்வேறு காரணங்களால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் தேக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டு விபரம் சேகரிப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்றாக வேண்டும் என ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
ஏற்கனவே, 100 சதவிகித தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் தவித்து வரும் நிலையில், இது மிகப்பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இப்பணிகளுக்கு மதிப்பூதியம் வழங்கப்படுவதால், ஏராளமான வேலையில்லா பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில், அவர்களும் பயன்பெற முடியும். கற்பித்தல் பணிகளும் பாதிக்காது. கல்வித்துறை தேர்ச்சி விகிதம் குறித்த தரும் நெருக்கடி ஒருபுறம்,உள்ளாட்சி நிர்வாகம் தரும் கூடுதல் வேலைப்பளு ஒரு புறம் என இருதலைக்கொள்ளி எறும்பாக ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
அதிலும், பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், இப்பணிகள் வழங்கப்பட்டிருப்பது கொடுமை. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பதால், இவற்றை திரும்ப பெற வேண்டும் .
Comments
Post a Comment