விரும்பிய இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்யக்கூடாது இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

‘விரும்பிய இடத்தில் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர்பணியை தேர்வு செய்யக்கூடாது‘ என்று இடமாறுதலை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இடமாறுதலை எதிர்த்து வழக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஆரோக்கிய அருள்தாஸ், லதாமகேசுவரி. இவர்கள், 2 பேரையும் செங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யும்படி ஆசிரியர்கள் 2 பேரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வி.முருகானந்தம் ஆஜராகி வாதாடினார்.

பரந்த மனப்பான்மை தேவை
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:- நிர்வாகம் மற்றும் மாணவர்கள் நலன்கருதி மனுதாரர்களை அதிகாரிகள் மாற்றுப்பணியாக இடமாறுதல் செய்துள்ளனர். ஆசிரியர் பணி என்பது இடமாறுதலுக்கு உட்பட்ட பணி தான்.

தங்களது விருப்பம் இல்லாமல் இடமாறுதல் செய்தது தவறு என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. தாங்கள் விரும்பிய இடத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதினால் ஆசிரியர் பணியை தேர்வு செய்து இருக்கக்கூடாது. ஆசிரியர் பணி புனிதமானது. ஆசிரியர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆசிரியர்கள் தேவையில்லாமல் வழக்கு போட்டு கோர்ட்டு நேரத்தை வீணடிக்கக்கூடாது. சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதற்காக ஆசிரியர்கள் தங்களது ஆற்றலை செலவிட வேண்டும். மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog