ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை

ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.

கட்டுப்பாடு:
தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவை, ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. 2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை.

இந்த காலியிடங்களில் ஆதிதிராவிடர் மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டோரையும் நிரப்பக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. தேர்வு முடிவை வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. ஏப்., 16ல் இடைக்காலத் தடை நீக்கப்பட்டு, 70 சதவீத ஆசிரியர்களை, அதாவது, 468 ஆசிரியர்களை பணியில் சேர்க்கலாம் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முற்றுகை:
ஆனால், இதுகுறித்து, டி.ஆர்.பி., இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, டி.ஆர்.பி., அதிகாரிகளை பார்க்க அழைத்துச் சென்றனர்.

டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவியை விண்ணப்பதாரர்கள் சந்தித்து, மனு அளித்தனர். அப்போது, 'சட்ட ஆலோசனை பெற்ற பின், வரும் 15ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும். இல்லாவிட்டால், வரும், 18ம் தேதி தேர்வர்கள் டி.ஆர்.பி., அதிகாரிகளை சந்திக்கலாம்' என, உறுப்பினர் செயலர் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.

'வரும், 15ம் தேதி முடிவை அறிவிக்காவிட்டால், ஆசிரியர்களுடன் இணைந்து தீவிரப் போராட்டம் நடத்துவோம்' என, தேர்வர்களின் பிரதிநிதிகள் ராமநாதபுரம் அன்பரசு மற்றும் திருவண்ணாமலை ரவி தெரிவித்தனர். இந்த முற்றுகையால், டி.ஆர்.பி., வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog