கணினி ஆசிரியர்கள் 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை
திண்டுக்கல்: 'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது. அந்த புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மீண்டும் புத்தகங்களை புழக்கத்தில் விட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் வேலையின்றி 20 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட்., கணினி அறிவியல் ஆசிரியர்கள் உள்ளனர்.

அவர்களை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் அமர்த்த வேண்டும். அரசுப்பள்ளிகளில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கணினியை சார்ந்தே உள்ளன. கணினி அறிவியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்., அரசு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார வளமையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் போது கணினி அறிவியல் பாடத்திட்டத்திற்கான பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் வரும் மே மாதம் 20 ஆயிரம் பேருடன் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.

Comments

Popular posts from this blog