அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்குழு
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான முறையை ரத்து செய்து கடந்த 2.8.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் மட்டுமல்லாமல், பத்திரிகை விளம்பரங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெற்று, தகுதியான ஆட்களைக் கண்டறிந்து அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் அதில், எத்தனை பணியிடங்கள் உள்ளன? அதில் சேர்வதற்கான தகுதி என்ன? வயது, வயதில் சலுகை, இடஒதுக்கீடு போன்றவையும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருக்க வேண்டும். இதற்காக தேர்வுக் குழுவை அமைக்கவேண்டும்
.
அப்பீல் தள்ளுபடி
வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பெறப்படும் பட்டியலுடன் விளம்பரங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பதாரரையும் சேர்த்து, ஆட்கள் தேர்வுப் பணிக்கான முறையை வகுத்துவிட்டு, அதன் பிறகு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் அப்பீல் தாக்கல் செய்தார். அந்த அப்பீலை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், வேலை வாய்ப்புக்காக குறைந்தபட்சம் இரண்டு பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று உள்ளூர் மொழியில் வெளியாகும் பத்திரிகையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமல்படுத்த முடிவு
இந்த உத்தரவை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கடிதம் எழுதினார். அதை கவனமுடன் அரசு பரிசீலித்து, ஐகோர்ட்டின் அந்த உத்தரவை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment