கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்காக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 20 சதவீதம்பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், பணிநாடுநர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்., 27ம் தேதி துவங்கியது. சேலம், சாரதா பாலமந்திர் மெட்ரிக் பள்ளியில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று மாலையுடன் முடிந்தது. இதில், 20 சதவீதம் பேர், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை.
'ஆப்சென்ட்' ஆனவர்களில் பலரும், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவதால் கலந்து கொள்ளவில்லை என, தெரியவந்துள்ளது. இருப்பினும், விடுபட்டவர்களுக்காக, மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க, டி.ஆர்.பி., முன்வந்து உள்ளது. அதன்படி, கடந்த நான்கு நாட்களாக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல் விடுபட்டவர்கள், நாளை, 4ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், குறிப்பிட்ட மையங்களில், நாளை, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment