பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில்முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 3,484 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக கடந்த 2010-இல் அரசு விளம்பரம் வெளியிட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில், சிலரின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன. இதனிடையே, மீண்டும் 2012-13-இல் விளம்பரம் வெளியானது. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு, அவர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில், பணியிடத்தில் நிரப்புவதற்கு தனது பெயரை இதுவரை அழைக்கவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை எனவும் ராமன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி. செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையில், அவரை பணி நியமனம் செய்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின் போது, மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுவிட்டதாகவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பணி நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் பின்பற்றத் தவறுகிறது. இது போன்று பல முறை நடைபெற்றுள்ளது. இவ்வாறு உத்தரவுகளை பின்பற்றாததால்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாகின்றன. மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவில்லையெனில் உயர் நீதிமன்ற உத்தரவை டி.என்.பி.ஸ்.சி. முழுமையாக நிறைவேற்றி இருக்காது.

நீதிமன்ற உத்தரவுகள், விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாக அரசு தலைமை வழக்குரைஞர் உறுதி அளித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாது எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பையும் டி.என்.பி.எஸ்.சி. செயலர் கோரியுள்ளார். இதேபோன்று மீண்டும் நடைபெறாது என நீதிமன்றம் நம்புகிறது. கருணை அடிப்படையில் அவரது மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog