ஒரே நேரத் தில் இரு படிப்பு படித்ததாக கூறி ஆசிரியர் பணிமறுக்கப்பட்டவரின் மனுவை பரிசீலிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, விளாங்குடியை சேர்ந்த எஸ்.தேன்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ (ஆங்கிலம்), எம்ஏ (ஆங்கிலம்) மற்றும் பிஎட் முடித்துள்ளேன். கடந்த ஜன. 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை டிஆர்பி நடத்தியது. இதில் நான் கலந்து கொண்டேன். மாநில அளவில் 49வது இடம் பிடித்தேன். இதன்பிறகு பிப். 16ம் தேதி மதுரையில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டேன்.
சரிபார்ப்பின்போது 2008&10ம் ஆண்டில் எம்ஏ முடித்ததாகவும், இதே காலத்தில் பிஎட் முடித்துள்ளதாகவும் கூறி எனக்கு பணி வழங்க மறுத்தனர். ஆனால், நான் 2008&09ல் எம்ஏ முதலாமாண்டு தேர்ச்சி பெற்றேன். 2009&10ம் ஆண்டில் பிஎட் தேர்ச்சி பெற்றேன். இதன் பிறகே எம்ஏ இரண்டாமாண்டு படிப்பை 2010&11ல் முடித்தேன். ஒரே நேரத்தில் இரண்டு படிப்பை படிக்கவில்லை என்பதை அதிகாரிகளிடம் விளக்கினேன். இதற்கான சான்றுகளையும் தாக்கல் செய்தேன். இதையடுத்து தேர்வு பெற்றோர் பட்டியலில் நான் இருப்பதாகவும், என் பணி நியமனம் குறித்து பள்ளி கல்வித்துறைதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவித்தனர். எனக்கு ஆசிரியர் பணி வழங்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் லூயிஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, மனுதாரரின் மனு வை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் 6 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment