மாணவியரின் புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம்: பெண்கள் கண்ணீர் !

சமூக வலைதளங்களில், படத்தை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, 'படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது' என்கின்றனர், போலீசார்.

'பேஸ்புக்', ட்விட்டர், வாட்ஸப், கூகுள் பிளஸ் என நீளும் சமூக வலைதளங்களின் பட்டியலில், 'இணைந்திருப்பதே பெருமை' என்று, இளம் தலைமுறையினர் பலரும் நினைக்கின்றனர். தகவல் பகிரவும், தொடர்பு கொள்ளவும் பேருதவியாக இருக்கும் சமூக வலை தளங்களால் ஏற்படும் நன்மைகளைப் போலவே, தீமைகளும் ஏராளமாக இருக்கின்றன; இதை, பலர் அறிவதில்லை.சமூக வலைதளங்களில், ஒருவருக்கு 100 நண்பர்கள் இருப்பதாக வைத்து கொண்டால், அவர்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும் படங்களும், தகவல்களும், அந்த, 100 நண்பர்களுடைய நண்பர்களாலும் பார்க்கப்படுகின்றன;

அவர்களில் ஒருவர், தவறான எண்ணம் கொண்டவராக இருந்தாலும், படங்களை கெட்ட நோக்கத்துடன் பயன்படுத்தி விட முடிகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இன்றி, பெண்கள், தினமும் தங்கள் படங்களையும், குடும்ப படங்களையும் பதிவேற்றம் செய்கின்றனர்.

சமீபத்தில், கோவை மாவட்டத்தில் தனியார் கல்லுாரியில் படிக்கும் மாணவியர் சிலர், தங்கள் புகைப்படத்தை 'பேஸ்புக்'கில் வெளியிட்டுள்ளனர். போலி அக்கவுண்ட் மூலம் திருடப்பட்ட மாணவியரின் புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான மாணவியர், போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட கோவை மாணவி கூறியதாவது: எனது பேஸ்புக்கில், முறையான பாதுகாப்பு செய்து வைத்திருந்தேன். ஆனால், என் தோழியின் புகைப்படத்தை எப்படியோ எடுத்து, அதில் ஒரு போலி ஐ.டி., தயார் செய்து, எனக்கு நட்பு அழைப்பு வந்திருந்தது. கவனிக்காமல் நானும், 'தோழி தானே' என நினைத்து நண்பராக்கிவிட்டேன். அந்த மர்ம நபர், எனது அக்கவுண்டில் இருந்து குரூப் படங்களை பயன்படுத்தி, எங்கள் தோழியின் அனைவரின் பெயரிலும், போலி ஐ.டி., தயார் செய்து பல தோழிகளுக்கு அழைப்பு அனுப்பி விட்டார். அவர்களும், யாரென்று தெரியாமல், ஏற்றதன் விளைவு, அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது, ஆபாச மெசேஜ், படங்கள், அழைப்புகள் வருகின்றன. 'புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தி விடுவேன்' என்ற மிரட்டல்கள் வேறு வருகின்றன. பல தோழிகளின் புகைப்படங்கள், முகம் தெரியாத நபரிடம் இருப்பது, கவலையளிக்கிறது.ஒருவரே, அனைத்து பெண்களுக்கும் மெசேஜ் செய்கிறாரா, அல்லது பலர் இணைந்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்களா, என்பது புரியவில்லை. தோழிகள் அனைவரும் பயந்துள்ளனர். இதுகுறித்து, புகார் பதிவு செய்துள்ளேன். மிகவும் பாதுகாப்பாக இருந்தும், இத்தவறு நடந்துவிட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

'புகார் தெரிவிக்க தைரியமாக முன்வர வேண்டும்' கோவை மாநகர 'சைபர் கிரைம்' போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாலை கூறியதாவது:வலைதளங்கள், ஆன்-லைன், தொலைபேசி என மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், பெண்களின் நிலை மிகவும் மோசம். மாதத்துக்கு சராசரியாக, ௧௦ புகார்கள் வருகின்றன. பெரும்பாலான பெண்கள் அல்லது குடும்பத்தினர், புகார்களை வழக்காக பதிவு செய்ய விரும்புவதில்லை. இதுபோன்ற தொந்தரவுகள் இருப்பின், பெண்கள் பயந்து, அமைதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தைரியமாக புகார் தெரிவிக்க முன்வரவேண்டும். சமூக வலைதளங்களில், தனிப்பட்ட மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.இவ்வாறு, இன்ஸ்பெக்டர் முத்துமாலை தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog