ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முறைகேடு செய்து விட்டதாக குற்றம் சாட்டி, மாற்றுத்திறனாளிகள் பட்டினிப் போராட்டம் துவங்கி உள்ளனர்.தமிழகம் முழுவதும், வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர் உள்ளிட்ட, பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 2006 - 2013 வரை, மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீட்டில், மொத்தம், 1,107 பின்னடைவுப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில், 405 தேர்வு செய்யப்பட்ட இடங்கள் நீங்கலாக, மீதமுள்ள, 702 இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி.,க்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது. இதில், 4,500 மாற்றுத்திறனாளி பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் பங்கேற்றனர். தேர்வு முடிவு ஜூனில் வெளியிடப்பட்டு, 934 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 198 பேர் பணி அமர்த்தப்பட்டு, மற்றவர்கள் தேர்வு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, மாற்றுத்திறனாளிகள் புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து, சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், பட்டினிப் போராட்டம் துவங்கி உள்ளனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.போராட்டம் நடந்ததால், தேர்வு வாரிய தலைவர் விபு நய்யர், தேர்வு வாரிய அலுவலகத்துக்கு வரவில்லை. தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி, இப்பிரச்னை குறித்து பேச மறுத்து விட்டார்.
முறைகேடானஒதுக்கீடு:மாற்றுத்திறனாளிகள் பட்டதாரிகள் அமைப்பின்ஒருங்கிணைப்பாளர், சக்திவேல்கூறியதாவது:சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 'மெரிட்'டில் அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத்திறனாளிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் பொது ஒதுக்கீட்டில் எடுக்காமல், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ளது; இது முறைகேடாகும். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மாற்றுத்திறனாளி கள் என்று குறிப்பிடாமலேயே, அவர்களுக்கு பொதுப் பட்டியலில் பணி கிடைக்கும். மேலும், பின்னடைவாக அறிவிக்கப்பட்ட, 1,000 பணியிடங்களை நிரப்பாமல், வெறும், 198 இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளனர்.எனவே, எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, டி.பி.ஐ., வளாகத்தில் பட்டினிப் போராட்டத்தைதொடருவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
Comments
Post a Comment