கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாதநிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, இனி பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே நியமிக்க முடியும்.
நியமனம்:
இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடந்த, 2012ம் ஆண்டில், முதல் தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பல லட்சம் பேர் தேர்வெழுதிய நிலையில், 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், ஒரு சில மாதங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இரண்டிலும், தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், உடனடியாக அரசு பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டது. கடந்த, 2013ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு, ஆசிரியர்களிடையே ஆர்வம் அதிகரித்தது. தேர்ச்சி பெற்றால் அரசு வேலை என்ற குறிக்கோளில், ஏராளமானோர் தீவிரமாக பயிற்சியெடுக்க துவங்கினர்.
இதனால், அந்த ஆண்டில் நடந்த தகுதித்தேர்வில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். 10 ஆயிரத்திற்கும் குறைந்த காலிப்பணியிடங்களே இருந்த நிலையில், அனைவருக்கும் அரசு வேலை தர முடியாத சூழல் உருவானது. இதற்காக தரம் பிரிக்கும் முயற்சியில், 'வெயிட்டேஜ்' முறை அமல்படுத்தப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகள் குறித்து, நீதிமன்றத்தில் தொடர்ந்த பல்வேறு வழக்குகளின் காரணமாக, அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் தாமதமாகிக்கொண்டே இருந்தது.
வெயிட்டேஜ் முறை மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு, ஒரு வழியாக, கடந்த சில மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆர்வம்:
கடந்த இரண்டு ஆண்டில் நடந்த, மூன்று ஆசிரியர் தேர்விலும், அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தினால், அரசு பணி நியமனம் வழங்கப்படும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது. ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் சரிந்து வரும் மாணவர் எண்ணிக்கையால், தற்போதுள்ள ஆசிரியர் எண்ணிக்கையே உபரியாக இருந்து வருகிறது. அரசு பள்ளிகளில் பணிநியமனம் என்பது, இப்போதைக்கு தேவைப்படாது என்பதால், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்துவது குறித்தும், எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பணிநியமனம் இல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால், ஆசிரியர்
தேர்வு வாரியம் தயக்கம் காட்டி வருகிறது. கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு மேலாகியும், ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது, ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வலியுறுத்தல்:
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: அரசும் சரி, பொதுமக்களும் சரி, ஆசிரியர் தகுதித்தேர்வை, அரசு பள்ளிகளில் பணி நியமனத்துக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வாகவே கருதுகின்றனர். உண்மையில், தனியார் பள்ளிகள், உதவிப் பெறும் பள்ளிகள் என, அனைத்திலும், தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. இப்படியிருக்கும் போது, அரசு பணியை மட்டும் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தாமல், தள்ளி வைத்துக்கொண்டே வருவது, பலரின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் செயலாக உள்ளது. அதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் கல்வி முடித்தவர்கள், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, நிர்வாகம் அனுமதித்தாலும், சேர முடியாத சூழல் உருவாகியுள்ளது. தகுதியான ஆசிரியர் என்பதற்கான அளவுகோலாக, ஆசிரியர் தகுதித்தேர்வை கருதி, உடனடியாக அதை நடத்திட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment