10 ஆயிரம் அரசு ஆசிரியர்கள் பணியிலிருந்து வெளியேறத் திட்டம்: கேள்விக்குறியாகும் கிராமப்புறப் பள்ளிகளின் எதிர்காலம்

ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஊதியம் வழங்காததால், 10 ஆயிரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், அரசுப் பணியில் இருந்து வெளியேறித் தனியார் பள்ளிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதனால், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறை ஊழியர்களுக்கு, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஏழாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளும் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

குற்றச்சாட்டு:ஆனால், கடந்த 1999க்கு பின் பணிக்குச் சேர்ந்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுக்கு மட்டும், ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பல வகைகளில் போராடியும் ஊதியத்தை உயர்த்த அரசு முன் வராததால், புதிதாக பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், 10 ஆயிரம் பேர் பணியில் இருந்து விலகி, அதிக சம்பளத்தில் தனியார் பள்ளி பணிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜே.ராபர்ட்கூறியதாவது:தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இடைநிலை ஆசிரியர்கள், அரசுப் பள்ளி களில் பணியாற்றுகின்றனர். இதில், 1999 வரை பணிக்குச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு, மூன்று விதமான, குறைந்த சம்பள விகிதம் வழங்கப்படுகிறது. பட்டதாரி, முதுகலைப் பட்டதாரிஆசிரியர்கள், அரசுத் துறை ஊழியர்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி ஊதியம் உயர்த்தப்பட்டாலும், இந்த, 60 ஆயிரம் பேருக்கு மிகக்குறைந்த அளவில் அடிப்படை ஊதியமாக, 5,200 ரூபாயும், தர ஊதியமாக, 2,800 ரூபாயும் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, ஊதிய உயர்வு கேட்டு முதல்வரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலர், அரசின் நிதிச் செயலர், கல்வித்துறைச் செயலர் மற்றும் உயரதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டோம்.

ஆனால், 60 ஆயிரம் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கிராம பள்ளிகளில் பணியாற்றுவதால், அவர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

கோரிக்கை:இதுதொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அதில், எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, நான்கு மாதங்களில் முடிவெடுக்க, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர்,ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பான - ஜேக்டோ மூலம் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். ஆனாலும், அரசின் அலட்சியம் தொடர்ந்தால், முதற்கட்டமாக அதிக பாதிப்புக்குள்ளான, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகி, தனியார் பள்ளிகளில், நல்ல சம்பளத்தில் பணியில் சேரும் நிலை ஏற்படும். எனவே, கிராமப்புற அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத நிலையைப் போக்க, இந்தப் பிரச்னையில், வரும் கல்வி ஆண்டுக்குள், தமிழக அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog