பின்னடைவு காலிப் பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், மாநில ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், கவனிப்பாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது. இதில், ஆசிரியர் பணியிடங்களில் மட்டும் மாற்றுத் திறனாளிகளுக்காக 1,107 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதனால், மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிய பிறகு, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் 702 இடங்களை மட்டும் நிரப்புவது தொடர்பாக தெரிவித்துள்ளது. மீதம் உள்ள 405 பணியிடங்கள் குறித்து தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவே, பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது குறித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர் இதையடுத்து, வரும் 22-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog