தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில் விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார்.
திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப 2014ல் அறிவிப்பு வெளியானது. சில வழிகாட்டுதல்களை பின்பற்றி நியமனம் மேற்கொள்ள 2013 ஆக., 28ல் அரசு உத்தரவிட்டது. அதில், 'மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்' என உள்ளது.
தற்போதைய பணி நியமன நடைமுறையில் மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்? இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா? என தெளிவுபடுத்தவில்லை. பொது அறிவிப்பு மூலம்தான் அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதை பின்பற்றவில்லை.மேலும் அந்தந்த இடத்தில் வசிப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்பது இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரானது. அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பணி நியமனம் மேற்கொள்ள 2014 நவ.,18ல் தனி நீதிபதி தடை விதித்தார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். நீதிபதி: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை வசிப்பிடம் அடிப்படையில் நியமனம் மேற்கொள்வது தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கு இதே கோர்ட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் நிலுவையில் உள்ளது. அத்துடன் இவ்வழக்கையும் சேர்த்து விசாரிக்க அங்கு மாற்றப்படுகிறது.
Comments
Post a Comment