முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்திருந்தனர். 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தவர்களில் 1,90,966 பேர் (94.41 சதவீதம்) தேர்வு எழுதினர். இந்தத் தேர்வைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களும் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநிலம் முழுவதும் தேர்வு அமைதியாக நடைபெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.தேர்வு முடிவுகள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும். அதன்பிறகு, அந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டு இறுதி விடைகள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பிப்ரவரியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிழைகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளது.
கடந்த ஆசிரியர் தகுதித் தேர்விலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், முழுமையாக இந்தத் தேர்வில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆள்மாறாட்டம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக புகைப்படங்களுடன் கூடிய விடைத்தாள்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
Comments
Post a Comment