தமிழகத்தில், நாளை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு 2 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

2 லட்சம் பேர் எழுதும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் 1,807 முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 10-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சமர்பிக்க கடந்த நவம்பர் 26-ந்தேதி கடைசி நாள்.


2 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

2 லட்சத்து 2 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். தேர்வுகள் 499 மையங்களில் நடக்கிறது. சென்னையில் மட்டும் 34 மையங்களில் 15 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவோர்கள் ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த தேர்வை செம்மையாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடக்கும்போது தேர்வு அறைகள் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தேர்வு மையங்களை தேர்ந்து எடுத்தனர்.

விண்ணப்பதாரர் முன்னிலையில் வினாத்தாள் பிரிப்பு மேலும் ஒவ்வொரு அறைக்கும் 20 பேர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்து உள்ளனர். தேர்வு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் காலை 9.30 மணிக்கே தேர்வு எழுதும் முதுகலை பட்டதாரிகள் வந்துவிட வேண்டும். வினாத்தாள் அவர்கள் முன்னிலையில்தான் பிரிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு அறையிலும் இதுபோல நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேர்வு எழுதுபவர்கள் அவர்களின் பெயர்கள், பதிவு எண்ணை எழுதவேண்டியது இல்லை. அந்த விவரங்கள் அனைத்தும் விடைத்தாளில் ஏற்கனவே அச்சாகி இருக்கும். இந்த முறை முதல் முதலாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைபடுத்துகிறது.

கையெழுத்துடன் சீல் வைப்பு

தேர்வு பகல் 1 மணிவரை நடைபெறுகிறது. தேர்வு முடிந்தாலும் தேர்வு எழுதியவர்கள் அந்த அறையில் இருப்பது நல்லது. ஒவ்வொரு அறையிலும் உள்ள 20 விடைத்தாள்களும் ஒரு கவரில் போடப்பட்டு அந்த கவரில் தேர்வு எழுதிய முதுகலை பட்டதாரிகள் கையெழுத்து போடவேண்டும். அவர்கள் கையெழுத்துபோட்ட பிறகுதான் அந்த கவர்கள் சீல் வைக்கப்படும்

தேர்வு நாளை நடந்தாலும் அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையங்களை பார்வையிடவும், தேர்வு நன்றாக நடக்கவும் நினைத்து டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள இயக்குனர்கள் கு.தேவராஜன், க.அறிவொளி, ரெ.இளங்கோவன், தண்.வசுந்தராதேவி, வி.சி.ராமேஸ்வர முருகன், ச.கண்ணப்பன், பிச்சை, ராஜராஜேஸ்வரி, இணை இயக்குனர்கள் தர்மராஜேந்திரன், கருப்பசாமி, கார்மேகம், பழனிச்சாமி, உஷா, உமா, ராமராஜன், நரேஷ், பாலமுருகன், குப்புசாமி, அமிர்தவல்லி மற்றும் அதிகாரிகள் அனைவரும் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

கலெக்டர்கள்

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேர்வு கமிட்டி தலைவராக செயல்படுவார்கள் என்றும் தேர்வுக்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog