'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,'குரூப் - 1' தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உட்பட, உயர்நிலை பணிகளுக்காக, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 1 தேர்வு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், குடிமைப் பணிகள் தேர்வுக்கு இணையானது. தற்போது, குரூப் - 1 தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு, 35 ஆக உள்ளது. இந்த ஆண்டிற்கான குரூப் - 1 தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கிராமப்புற இளைஞர்கள் இத்தேர்வில் வெற்றி பெற வசதியாக, வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: குரூப் - 1 தேர்வு, யு.பி.எஸ்.சி., தேர்வு போல ஆண்டுதோறும் நடத்தப்படுவது இல்லை. குரூப் - 1 நிலையில், பெரும்பாலான காலிப் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுவதால், நேரடி நியமனத்திற்கான பணியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனால், அதிகபட்ச வயது வரம்பை தொடும் சிலர், இந்தத் தேர்வை எழுதும் வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்படுகிறது.
மற்ற மாநிலங்களில், குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பு, 45 ஆக உள்ளது. எனவே, தமிழக அரசும் எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, வயது வரம்பை இரண்டு முதல் மூன்று ஆண்டு கள் அளவுக்கு உயர்த்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment